தமிழ் நிலைக்குமா?
எத்தனையோ விசித்திரமான போராட்டங்களை சந்தித்து வந்துள்ளது இந்த தமிழகம்.
இப்பொழுது அதன் வரிசையில் மீண்டும் எழும்பியுள்ளது இந்தி எதிர்ப்பு.
அது என்ன இந்தி எதிர்ப்பு?
இல்லை இல்லை, இது வெறும் இந்தி திணிப்பு எதிர்ப்பு மட்டுமே என்றும் சப்பை கட்டும் வரிசையில் உள்ளவரா நீங்கள்?
சரி, இந்த பதிவை படித்த பின், உங்கள் நிலைப்பாட்டினை தெரிவிக்கவும். வேண்டாம், தெரிவிக்க கூட தேவை இல்லை, தெரிந்து தெளிவு கண்டாலே நன்று.
அதற்கு முதலில் இந்த வெட்டி அரசியலையும் உணர்ச்சிகளையும் சற்றே பிரித்து சிந்தித்து இதை அணுகுவோமா?
இந்தியை கற்பதினால் நம் தாய் மொழி தமிழ் அழிந்துவிடும் என்று இன்னும் எத்ததனை நாட்கள் தான் இவர்கள் மக்களை அச்சத்திலேயே வைத்து கொண்டிருப்பார்கள்?
எந்த ஒரு மொழியையும் கற்பதினால் பிற மொழி அழியும் என்று கூறும் கருத்தில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை.
வீரமாமுனிவர் என்பவரை கேள்விப்பட்டதுண்டா?
கேள்விப்பட்டிருந்தால் நீங்கள் இந்த சப்பைகட்டு கட்டியிருக்கவே மாட்டீர்கள்.
கேள்விப்படவில்லை என்றால், உங்கள் மீது எனக்கு பரிதாபம் தான் வருகிறது. உங்களை போன்றோர் இங்குள்ள போதும் தமிழ் மொழி அழியாமல் இருக்கிறதே, இது ஒன்றே போதாதா, தமிழ் என்றும் நிலைக்கும் என்று தெளிய?
சரி, விசயத்திற்கு வருவோம்.
இன்று நாம் புள்ளி வைத்து எழுதும் தமிழ் எழுத்துக்கள் தோன்ற காரணமே இவர் தான். இவர் யார் தெரியுமா? பிறப்பால் ஒரு இத்தாலியர். இந்தியாவில் தன் மதம் பரப்ப வந்த கிருத்துவர், தமிழ் மொழியால் கவரப்பட்டு அதை கற்றதோடு நிற்காமல் இன்றும் நாம் உபயோகிக்கும் எழுத்து வடிவ தமிழுக்கு வித்திட்ட பெருமைக்கு உரியவர்.
இன்னும் கூறப்போனால், நீங்கள் பள்ளிகளில் படித்தீர்களே உரைநடை இலக்கியம், அதன் தந்தையே இவர் தான்.
இவர் தன் தாய் மொழி விடுத்து தமிழ் கற்கவில்லை. மாறாக, தமிழில் இருந்த பல அறிய பொக்கிஷத்தை மொழிபெயர்த்து உலகம் எங்கும் கொண்டு சேர்த்தவர். இங்கே தோன்றிய திருக்குறளை நாம் போற்றி கொண்டிருப்பது பெருமை அல்ல. ஆனால், அங்கே ஆங்கிலயேர்களும் இதை போற்றிக்கொண்டுள்ளார்களே, எதனால்? இவர் மொழிபெயர்த்த ஒரே காரணத்தால் தான்.
சிந்தியுங்கள், நம் நாட்டின் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் அறிய பல ஆங்கிலேயர்கள் தமிழ் மொழியை கற்றார்கள். விளைவு? அவர்கள் மொழி அழிந்ததா? மாறாக இன்றும் கொடி நாட்டிய படி தானே இருக்கிறது?
தமிழ் மொழியை காக்க துடிக்கும் அரசியல்வாதிகளே, உங்களை ஒன்று கேட்கிறேன்.
அறிந்தோ அறியாமலோ, ஆங்கிலம் கற்றால் தான் வாழ்க்கை என்ற ஒரு நிலைக்கு இன்று மக்களாகிய நாங்கள் தள்ளப்பட்டுளோம். இதற்கு யார் காரணம்?
மூச்சிற்கு முந்நூறு முறை தமிழ் தமிழ் என்று கொடி பிடிக்கும் இந்த தமிழகத்தில் தான், ஆங்கிலம் கற்கவில்லையென்றால் முன்னேற்றம் என்பதே இல்லை. ஆங்கில பள்ளியில் பயின்றால் தான் வாழ்க்கை, அப்பொழுது தான் நன்கு பணம் சம்பாதிக்க முடியும் என்ற நிலைமை.
இது எப்படி வந்தது?
உடனே ஐயா அப்துல் கலாம் அவர்களை கொண்டு வராதீர்கள். நீங்கள் கூறும் ஒவ்வொரு கலாமிற்கும் தமிழ் மொழி மட்டுமே கற்றதால் வாழ்க்கையே போராட்டமென்று ஆகிப்போன பல லட்சம் மக்களை நாங்களும் கொண்டு நிறுத்த முடியும்.
உண்மையிலேயே நீங்கள் தமிழுக்கு மரியாதை செய்யும் எண்ணம் இருந்திருந்தால் நீங்கள் ஆட்சியில் இருக்கும் போதே இதை மாற்றி இருக்க வேண்டாமா?
தமிழ் மொழி கற்றால் காலணா பயனில்லை என்ற எண்ணம் வராமல் செய்திருக்க வேண்டாமா? அரசு பணிகளுக்கு தமிழ்வழி கல்வி கற்றோர்க்கு முன்னுரிமை அளித்திருக்கலாமே?
தமிழ் வழி கல்லூரிகள் பல திறந்து தமிழக மக்களை தமிழில் தேர்ச்சி பெற செய்திருக்கலாமே? அல்லது தமிழ் மொழி மூலமாக பொருளீட்டும் வாய்ப்புள்ள பாடத்திட்டங்களைஅறிமுகப்படுத்தி இருக்கலாமே? மாறாக என்ன செய்தீர்கள்?
ஏரி குளம் என்று கூட பாராமல் எங்கும் ஆங்கில பொறியியல் கல்லூரி. ஏன்?
நன்றோ தீதோ, எந்த படிப்பு படித்தால் கை நிறைய சம்பாதிக்கலாம் என்று ஆராய்ந்தே மக்கள் படிக்கிறார்கள், அல்லது தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். அப்படி என்றால், தமிழ் வழி விடுத்து வேற்று மொழி பயில ஆர்வம் இருக்குமாயின் யார் பொறுப்பு?
தமிழ் கற்றாலும் கை நிறைய சம்பாதிக்க வழிவகை செய்யா கட்சிகள் எப்படி மக்களை அவர்கள் விரும்பிய மொழிக்கல்வியை தடுக்க முடியும்?
தமிழ் கற்றால் வெறும் தமிழ் வாத்தியாராக தான் வாழ முடியும் என்ற நிலைப்பாட்டினை தகர்த்தெறியுங்கள். பள்ளிப்படிப்பு மட்டுமில்லை, மேற்படிப்பும் தமிழில் கற்க காரணம் இருக்கும் வகையில் பாட திட்டத்தையும் வேலைவாய்ப்பு திட்டங்களையும் மாற்றி அமையுங்கள்.
பின், இந்தி என்ன, எந்த மொழி இங்கு வந்தாலும் அதை விடுத்து தமிழ் கற்கும் இளங்சிங்கங்களை நீங்கள் காண்பீர்கள்.
சரி, இறுதியாக அரசியலுக்கு வருவோம். இந்த அரசியல்வாதிகள் நிஜமாகவே தமிழ் மொழியின் மீது காதல் கொண்டிருந்தால், மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகள் போன்று இந்நேரம் அதை வர்த்தக மயமாக்கி இருக்க மாட்டார்களா?
அந்த வர்த்தகத்தில் தனக்கு லாபம் கிடைக்கும் வகையில் பல ஊழல்களும் செய்திருக்க மாட்டார்களா?
சற்றே சிந்தியுங்கள்.
தமிழோ இந்தியோ. எதுவாயினும் முதலில் படியுங்கள்.
Photo by Google Design.